Spirtual

இணைக்க
ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்
Swamy Vivekanandar

* எழுந்திருங்கள், எழுந்திருங்கள். நீண்ட இரவு கழிந்துவிட்டது. பகல்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் அன்பான இளைஞர்களே! உங்களுக்கு வேண்டுவதெல்லாம் உற்சாகம்... உற்சாகம் மட்டுமே.
* சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒருவர் இல்லாதிருக்கும் போது அவரைப் பற்றி, பிறர் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்.
* மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பது கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமக்கு தந்துவிடும்.
* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.
* மரணம் என்பது நமக்கு உறுதியாக ஒருநாள் வந்தே தீரும். அதற்குள் சிறிதளவாவது பிறருக்கு பயன்பட்டு அழிந்து போவது நல்லது.
*கோழைகளுடனோ அல்லது பொருளற்ற அரசியலுடனோ எந்தவிதத் தொடர்பும் எனக்கு இல்லை. கடவுளும் உண்மையும் தான் உலகிலுள்ள ஒரே அரசியல். மற்றவை எல்லாம் வெறும் குப்பை.
* அன்பின் மூலமாகச் செயல்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
* இறைவனுக்காகவே ஒவ்வொரு செயலும் நடைபெறட்டும். உண்பதும், உறங்குவதும், காண்பதும் ஆகிய அனைத்தும் அவனுக்காகவே.
* நமக்கென உள்ளதை பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரதிபலன் எதிர்பார்த்து செயலாற்றினால் நன்மை உண்டாவதில்லை.
* உங்களை உலகம் தூற்றினாலும், கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.
* எஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.
* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் உங்களுக்குள்ளே இருக்கின்றன.

பக்தி என்பது தூய்மையை அடிப்படையாக கொண்டே எழுகிறது. புறத்தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால், அதைக் காட்டிலும் மேன்மையான அகத்தூய்மையை மாற்ற முடியாது. அகத்தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீண் எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத்தூய்மை யை அடையலாம்.


எண்ணம், சொல், செயல் இவற்றால் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க வேண்டும். புலால் உண்ணாமல் இருப்பதால் மட்டும், யாரும் தூயவர்களாகி விடமுடியாது. கணவனை இழந்த பெண் அல்லது ஆதரவற்றவர்களை ஏமாற்றுபவனும், பொருளுக்காக எத்தகைய கொடுமைகளையும் செய்பவனும், புல்லை மட்டுமே உண்பவனாக இருந்தாலும் அவன் மிருகமே ஆவான். எவருக்கும் தீங்கு நினைக்காமல் பகைவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன், பன்றி மாமிசம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அவனே பரமயோகியாவான்.


பக்தியை கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியுள்ள மனம்தான் முயற்சி செய்யும் ஆற்றல் பெற்றிருக்கும். எத்தகைய இடர்களையும் விலக்கிக் கொண்டு முன்னேற, அதனால் தான் முடியும். அதே நேரம், அளவுக்கு மீறிய மகிழ்ச்சி கூடாது. அது, நமது ஆழமான சிந்திக்கும் ஆற்றலைக் குலைத்து விடும்.


லட்சியம் இல்லாமல் வாழாதே


இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.
என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.
எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.
உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.
மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்.

நீ தான் அனைவருக்கும் தலைவன்


-பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, 'நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்' என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை உடைத்து எறியவும் முடியும்.
- எந்தச் செயலும் உனக்கு முக்தி தர இயலாது. ஞானம் மட்டுமே அதைத் தர முடியும். ஞானத்தைத் தடுக்க முடியாது. அதை ஏற்பதோ தடுப்பதோ மனத்தால் முடியாது. ஞானம் வரும்போது மனம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே, ஞானம் மனத்தின் செயல் அல்ல. மனத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
-உன் சொந்த இயல்பிற்கு உன்னைத் திரும்பக் கொண்டு வரவே, செயலும், வழிபாடும் அமைந்துள்ளன. உடலை ஆன்மா எனக் கருதுவது முழு மனமயக்கம். உடலுடன் இருக்கும்போதே நாம் முக்தர்களாகலாம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் பொதுவான எதுவும் இல்லை.
- 'சித்', 'அசித்', 'ஈஸ்வரன்' என்பதற்கு, ஆன்மா, இயற்கை, கடவுள் என்றும், உணர்வுள்ளது, உணர்வற்றது, உணர்வைக் கடந்தது என்றும் ராமானுஜர் மூன்றாகப் பிரிக்கிறார். இதற்கு மாறாக சங்கரர், 'சித்' அதாவது ஆன்மாவும், இறைவனும் ஒன்றே என்கிறார். இறைவனே உண்மை, இறைவனே அறிவு, இறைவனே எல்லையற்றவர்.



-விவேகானந்தர் Download As PDF